தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, மார்ச் 04,2016,

நாகை, கோடியக்கரையின் 8 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நாகை, வேதாரண்யம் கோடியக்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தற்போது 8 மீனவர்களை சிறைபிடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதினார்.  அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நமது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது துரதிர்ஷ்டவசமானது. நமது மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் போது இதுபோன்று அவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். இதனால் நமது தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கசப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1-3-2016 அன்று மோட்டார் படகில்  4 தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஆர்கோட்டுதுறை பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் ஆவார்கள். இதேப் போன்று மற்றொரு 4 மீனவர்கள் பாரம்பரிய மோட்டார் படகில் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அவர்கள் கோடியக்கரை மீன்தளத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றார்கள். அந்த இரு பகுதிகளும் நாகை மாவட்டத்தில்  உள்ள பகுதிகளாகும். அந்த மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (3-3-2016) அன்று கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றது.

நமது மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி தொழிலை தங்களது பாரம்பரிய மீன்பிடி நீர் எல்லையிலேயே பிடித்து வருகிறார்கள். பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய நீர் எல்லையில் மீன் பிடிப்பது அவர்களது உரிமை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் தங்களது கடல் நீர் எல்லைக்கு அவர்கள் தான் உரிமையாளர்கள். சர்வதேச கடல்சார் எல்லை கோடு (ஐ.எம்.பி.எல்.) வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.

கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா – இலங்கை மேற்கொண்ட ஒப்பந்த உரிமைகளை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொண்டுள்ளது. பாக் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி சமூகத்தினர் மீன்பிடிக்க பல்வேறு முயற்சிகளை எனது அரசு மேற்கொண்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக துனா படகுகளை வாங்குவதற்கும் மானிய உதவியை எனது அரசு வழங்குகிறது.

ஆழ்கடல் பகுதியில் உள்கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு ரூ1520 கோடி அளிக்க வேண்டும் என்றும் இந்த உள்கட்டமைப்புக்கு ஆண்டு பராமரிப்புக்கு ரூ.10 கோடி அளிக்க வேண்டும் என்று நான் இந்திய அரசிடம் உதவி கேட்டுள்ளேன். இதுதொடர்பான குறிப்பாணைகளை கடந்த 3-6-2014 மற்றும் 7-8-2015 அன்று உங்களிடம் (பிரதமர்) தந்துள்ளேன். தமிழக அரசின் கருத்துருவிற்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் இலங்கை, அந்த படகுகளை விடுவிப்பதே இல்லை என்ற யுக்தியை கடைபிடிக்கிறது என்பதை நான் பல முறை குறிப்பிட்டு இருக்கிறேன். மீன்பிடி வலைகளையும் தருவது இல்லை. மீனவர்களை விடுவித்த பின்னரும் அவர்களது படகுகளை விடுவிக்காமல் இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் பல மீனவ குடும்பங்கள் மிகுந்த மனப்புழுக்கத்திற்கு ஆளாகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் போடப்படுகின்றன. கடுமையான வடகிழக்கு பருவமழை காலத்திலும் அந்த படகுகள் பெரும்சேதம் அடைகின்றன. மீன் பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கையிடம் இருந்து மீட்டு அதனை புதுப்பித்த நிலையில் இந்திய அரசு விரைவில் தர வேண்டும் என்பது என உறுதியான வேண்டுகோள் ஆகும்.

ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சூழ்ந்து இருக்கும் பிரச்சினைக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்விவகாரத்தில் நீங்கள் நேரடியாக தலையிட்டு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இந்த விவகாரத்தை இலங்கை நிர்வாகத்திடம் கொண்டு சென்று இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற்றும் 73 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 3-3-2016 அன்று கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்கள் மற்றும் 2 மீன் பிடி படகுகள் உள்பட அனைவரையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.