தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஜெயலலிதா

தமிழக முதல்வராக  6-வது முறையாக பதவி ஏற்று கொண்டார் ஜெயலலிதா

திங்கள் , மே 23,2016,

6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். ஆளுநரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் உள்பட 14 பேருக்கும், பின்னர் ராஜேந்திர பாலாஜி உள்பட 14 பேருக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, வாகை சந்திரசேகர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை ஆதீனம், நடிகர் சரத்குமார், சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் டாக்டர் சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சரியாக 12 மணியளவில் துவங்கிய பதவியேற்பு விழா 30 நிமிடங்களுக்குள் இனிதே நடைபெற்றது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா.