தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், செப்டம்பர் 13,2016,

சென்னை ; கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் வழங்கபடும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.,

கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், அங்கு வசிக்கும் பல லட்சம் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களது சொத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர இந்த கடிதம் எழுதுகிறேன். 

கடந்த 12-9-16 (நேற்று) அன்று தாங்கள் எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது. கடந்த 6-9-2016 அன்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படியும், கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து தகவல்கள் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், தமிழக போலீஸ் டி.ஜி.பிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் சட்டம்-ஒழுங்கு கடை பிடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள கன்னட மொழி பேசும் மக்களுக்கு உரிய பாதுகாப்பும், அவர்களது சொத்துகளுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

தமிழகத்தில்  விவசாயிகள் உள்பட சில பிரிவினர்  நடத்திய போராட்டங்கள் அமைதியாகவும், சட்ட – ஓழுங்குடன் நடந்தன. ஆனால் கர்நாடகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாடுடன் உள்ளனர். தமிழகத்தில் கன்னடம் பேசும் எந்த மக்கள் மீதும் அவர்கள் சொத்துகள் மீதும் எந்தவித பெரும் தாக்குதல் நிகழ்வுகள் நடக்கவில்லை.

சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் மிக சிறிய அளவிலான சம்பவங்கள் நடந்துள்ளன. கர்நாடகத்தின்  கூடுதல் தலைமைச்செயலாளர் (உள்துறை)  தமிழகத்தின் முதன்மைச் செயலாளர்களுக்கு ( உள்துறை மற்றும் பொது)  எழுதியுள்ள கடிதத்தில் அவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  அந்த நிகழ்வுகளில் தொடர்புடைய விஷமிகள் கைது செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு,  சட்டம்-ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் , கர்நாடகத்தில்  வன்முறை கும்பல்  தமிழ்பேசும் மக்கள் மீது  குறிவைத்து தாக்குவதும், அவர்களது சொத்துக்களை சேதப்படுத்தும் நிலைமையும் உள்ளது. தற்போது வந்துள்ள தகவல்கள் படி, கர்நாடகத்தில் வன்முறைகள் அதிகரித்து அதிக அளவிலான வாகனங்கள், 40 பஸ்கள் , 45 லாரிகள்  என பல தமிழக வாகனங்கள்  எரிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கர்நாடக போராட்டக்காரர்கள் வழக்கமாக தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் ஓசூர் அருகே கூடி  தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களையும், பயணிகளையும் மிரட்டி வருகிறார்கள். கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின்  ஹோட்டல்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இது வேதனையளிக்கும் அபாயகரமான சூழலாக உள்ளது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களின் சொத்து பாதுகாப்பு குறித்தும் உடனடி மற்றும் சீரிய நடவடிக்கை எடுக்க தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.