தமிழ்நாட்டில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை : மின்மிகை மாநிலமாக விளங்கும் தமிழகம், மத்திய தொகுப்புக்கும் மின்சாரம் வழங்கி சாதனை

தமிழ்நாட்டில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை : மின்மிகை மாநிலமாக விளங்கும் தமிழகம், மத்திய தொகுப்புக்கும் மின்சாரம் வழங்கி சாதனை

ஞாயிறு, மார்ச் 27,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு, பல முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியை கையாள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படத் தொடங்கியிருப்பதன் மூலம் தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்காலத்தில் சமாளிக்க வழிவகை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து, மின்மிகை மாநிலமாக ஆக்குவதற்கு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கடந்த 2012-ம் ஆண்டு சூரிய மின்உற்பத்தி கொள்கையை அறிவித்து, சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, சூரிய மின் சக்தி உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மின்உற்பத்தியில், கடந்த 5 ஆண்டுகளில் புரட்சியை ஏற்படுத்தியதற்கு அடையாளமாக தமிழகம் விளங்குகிறது.

2011-ம் ஆண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றபோது, தமிழகத்தில் நிலவிய மின்பற்றாக்குறையை தமது ஆற்றல்மிகு செயல்பாட்டால், பல்வேறு வகைகளில் மின் உற்பத்தியை பெருக்கியதுடன், சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்தியதாலும், தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களாலும், நீண்டகால மின்விநியோக ஒப்பந்தங்களாலும் தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையே இல்லாத நிலை உருவாகியுள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடங்கியுள்ள, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் மூலம் காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி கையாளப்படுவதால், தேவைக்கு அதிகமான மின்சாரம் மத்திய தொகுப்பிற்கும் அனுப்பப்படுகிறது. இந்த மையம் உருவாக்கப்பட்டதன் விளைவாக, கடந்த 22-ம் தேதி ஆயிரத்து 200-க்கும் அதிகமான மெகாவாட் காற்றாலை மின்சாரம் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள 7,252 மெகாவாட் நிறுவுதிறன் காரணமாக, இதுவரை சுமார் தொள்ளாயிரம் கோடி யூனிட் மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மின்சார உற்பத்தியிலும் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கி இருப்பதை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.