தள்ளாடும் கட்சி திமுக தான் அதிமுக இல்லை : கருணாநிதிக்கு மேயர் துரைசாமி பதிலடி

தள்ளாடும் கட்சி திமுக தான் அதிமுக இல்லை : கருணாநிதிக்கு மேயர் துரைசாமி பதிலடி

செவ்வாய், மே 31,2016,

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது சரித்திர சாதனை என்று பாராட்டிய சென்னை மேயர் சைதை துரைசாமி,அரசியலில் தள்ளாட்டம் என்பது தி.மு.க. கட்சிக்குத் தானே தவிர அ.தி.மு.க.விற்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.
 
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.அதில் அவர் பேசுகையில், “1962-1967-க்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஒரு புதிய ஃபார்முலாவை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா களம் கண்டார். மக்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடாக மக்களும் மகத்தான நம்பிக்கை வைத்து அவரை மீண்டும் முதலமைச்சராக்கி, மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு 130 எம்.எல்.ஏக்கள் தான் இருக்கிறார்கள் என்றும், இதனால், ஆளுங்கட்சி பல சவால்களை சந்தித்தாக வேண்டும் என்றும், மெஜாரிட்டிக்கு மேல் 12 உறுப்பினர்களே இருப்பதாகவும், இது அ.தி.மு.க.வுக்கு தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் சவாலாக இருக்கும் என்றும், அதாவது கயிற்றின் மேல் நடப்பது போன்ற ஒரு நிலை ஏற்படும் என்றும் தி.மு.க. கூறுகிறது.

தி.மு.க.விற்கு நினைவு படுத்த விரும்புகிறேன். கடந்த 2001-ம் ஆண்டில் அம்மா, இரண்டாம் முறையாக ஆட்சி பீடம் ஏறிய நேரத்தில் 132 எம்.எல்.ஏக்களே இருந்தனர். இந்த காலங்களில் எல்லாம், தி.மு.க. தான் தள்ளாட்டம் கண்டதே தவிர கழக ஆட்சி ஒரு போதும் தள்ளாட்டம் கண்டது கிடையாது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் வெறும் 96 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக அறுதிப் பெரும்பான்மைக்கும் மேலாக, மொத்தம் 133 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அம்மாவின் நல்லாட்சி கயிற்றின் மேல் நடப்பது போல இருக்கும் என்று கூறுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அதிமுகவில் அதிகம். எனவே அவர்களை எங்கும் அலைபாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அக்கட்சிக்கு உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப்போன்றநிலைஅவர்களுக்கு’என்று ,கருணாநிதி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி  அளிக்கும் வகையில் மேயர் சைதை துரைசாமி இவ்வாறு கூறியுள்ளார்.