தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவு ஏற்படும் : எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆவேசம்

தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவு ஏற்படும் : எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆவேசம்

ஜூன் 06, 2017,செவ்வாய் கிழமை,

சென்னை : தினகரனை ஒதுக்கி வைக்கவோ, அவரைப் பற்றி பேசவோ அமைச்சர்களுக்கு தகுதியில்லை, தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியதாவது:-

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 41 நாட்கள் ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்ததும் சசிகலா பார்த்து பேசிய பிறகு செயல் படப்போவதாக கூறினார்.அவர் பெங்களூர் சிறைக்கு சென்று சந்தித்த விட்டு வருவதற்குள் அமைச்சர் ஜெயக்குமார் அவசர அவசரமாக பேட்டி கொடுக்கிறார். வரம்பு மீறி பேசுகிறார். இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?

ஜெயக்குமாருடன் அங்குள்ள வட்ட செயலாளர், பகுதி செயலாளர் யாருமே கிடையாது. ஏன் அவரது தம்பியே அவருடன் இல்லை. இவர் மற்றவர்களைப் பற்றி பேசுகிறார். தன்னை முன்னிலை படுத்துகிறார்.இவரை யாரோ இயக்கு கிறார்கள். அவர் யார் என்பதை முதலில் தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும்.

கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்று சொல்வதை விட்டு விட்டு டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?கட்சி ஒன்று சேர வேண்டும். ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகும்.அமைச்சர் ஜெயக்குமார் தாந்தோன்றிதனமாக பேசுவது போல் நாங்களும் பேச ஆரம்பித்தால் பிரச்சினை பெரிதாகப் போய் விடும்.

எனவே தினகரனை ஒதுக்கி வைக்கவோ, அவரைப் பற்றி பேசவோ அமைச்சர்களுக்கு தகுதியில்லை. தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டியதை அமைச்சர்கள் முடிவெடுக்க முடியாது.

இவ்வாறு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறினார்.