திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 04,2016,

“சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் சேர மாட்டோம். காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தமாகா மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பது தொடர்பான வழிகாட்டு நூல்களை வெளியிட்டு, வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்னை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி மேம்படுத்தும் வகையிலும், சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் மாநில ஆணையம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
தேர்தல் தொடர்பாக, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்துள்ள முக்கிய மாணவர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமாகா வெற்றிக்கு பணியாற்றுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தேர்தல் தொடர்பாக சில நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பற்றி இறுதி செய்வதற்கு கால அவகாசமும் உள்ளது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னரே தெரிவிப்போம்.
வெற்றி பெறும் அணியுடன்தான் கூட்டணி அமைப்போம். ஆனால், தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் திமுக கூட்டணியில் சேரமாட்டோம். அதேநேரத்தில் காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம். என்றென்றும் தமாகா தனித்தன்மையுடன் செயல்படும் என்றார். கட்சியின் மூத்த தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், சேகர், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.