திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

சனி, ஜூலை 16,2016,

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடி ரூபாய் ரொக்கம், 22 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தி.மு.க.,வைச் சேர்ந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்.இவருக்கு சொந்தமான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லுாரிகள், வீடுகள், அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மூன்று நாட்களாக, 40 இடங்களில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகனிடமும், மூன்று நாட்களாக விசாரணை நடந்தது. சோதனை மற்றும் விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூன்று நாட்கள் தொடர்ந்த சோதனையில், 700 கோடி ரூபாய் அளவுக்கு, வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

450 கோடி ரூபாய் அளவுக்கு, வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை, ஜெகத்ரட்சகன் ஒப்புக் கொண்டார்; அதற்கான வரி அவரிடம் வசூலிக்கப்படும். மேலும், 16 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 22 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.