திமுக ஆட்சியில் பாலாறு விவகாரத்தை தீர்க்காதது ஏன்? திமுகவுக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சியில் பாலாறு விவகாரத்தை தீர்க்காதது ஏன்? திமுகவுக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

செவ்வாய், ஜூலை 26,2016,

சென்னை : பாலாற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரத்தில், ஆந்திர அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றும், ஆனால் மைனாரிட்டி தி.மு.க. அரசோ அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றம் சாட்டினார்.

தி.மு.க அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டியிருக்காது என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

சட்டசபை நேற்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். ஆந்திர மாநில அரசு அதன் எல்லையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதன் கரையைும் உயர்த்தி கட்ட முயற்சி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். அதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டார்.

இந்த பாலாறு தடுப்பணை விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்காக நடைபெற்று வருகிறது. அதை பற்றி சபையில் பேசக்கூடாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியதாவது.,

1892-ம் ஆண்டு மைசூர் அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பாலாற்றின் பாசன பகுதியாக இருக்கும் தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் பாலாறு குறுக்கே ஆந்திரா அரசு புதிய அணை கட்டுவதும், கரையை உயர்த்தி கட்டுவதும் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேச அனுமதி கேட்டார். அவரை பேச சபாநாயகர் அழைத்தார். அவை முன்னவர் பேசுவதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரை முழுமையாக பேச விடுங்கள் என்று அனைவரும் எழுந்து நின்று உரத்த குரல் எழுப்பி கொண்டிருந்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த செயலை கண்டித்து சபாநாயகர் தனபால் பேசினார். அதைதொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியானார்கள். நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து பேசிய போது, தி.மு.க .உறுப்பினர்கள் 20 நிமிட நேரம் சபையை நடத்த விடாமல் கூச்சல் போடுவது கண்டனத்திற்கு உரியது என்றார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலினை பேசும்படி சபாநாயகர் அழைத்தார்.

அப்போது ஸ்டாலின், பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவதை தடுத்து நிறுத்த அனைத்துகட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். அனைத்து கட்சிகுழுவை அமைச்சர் தலைமையில் ஏற்படுத்தி ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதையும், கரை உயர்த்தி கட்டுவதையும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க என்றார். இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராமசாமி, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர், ஆந்திர மாநில முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது., பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதே அணைகட்ட தொடங்கி விட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்த தி.மு.க. ஆட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு இப்பொழுது ஆந்திர மாநில அரசு அதே பணியை செய்ய ஆரம்பித்து விட்டது. அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி 1.7.16 அன்று ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். தடுப்பணை உயரத்தை மேலும் உயர்த்தக் கூடாது. தடுப்பணை கரையையும் உயர்த்தக்கூடாது என்று அறிவுரை வழங்கவேண்டும் முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.

அதையும் மீறி அவர்கள் தடுப்பணை உயரத்தை உயர்த்த முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் மூலம் ஆந்திர தலைமை செயலாளருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுத பணித்தார். அந்த கடிதத்திலும், 1892-ம் நிறைவேற்றப்பட்ட மதராஸ்–மைசூர் மாகாண ஒப்பந்தத்தை மாற்றக்கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கும் ஆந்திர மாநில அரசு உடன்படாததால், 18.7.2016 அன்று பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டக் கூடாது என்று தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என்று ஆந்திர அரசை தடுத்து நிறுத்தியிருந்தால், பிரச்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது. இப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் முதல்வர் ஜெயலலிதாதான். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு இதில் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.