இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸிற்கு வாக்களிக்காதீர்கள் : செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸிற்கு வாக்களிக்காதீர்கள் : செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்

சனி, மே 14,2016,

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான கருணாநிதி மற்றும் காங்கிரஸிற்கா உங்கள் வாக்கு என்ற பதாகையுடன் ஒருவர் பிஎஸ்என்எல் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

 சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (42). இவர் இன்று காலை வடக்குமெயின்ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக செல்போன் டவரில் சுமார் 125 அடி உயரம் ஏறி நின்று கொண்டு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் 3 பதாகைகளை டவரில் கட்டியிருந்தார்.

அந்த பதாகைகளில் இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமாணவர்களுக்கா உங்கள் வாக்கு, சகோதரி இசைப்பிரியா சிங்களராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு காரணமான கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் வாக்கு, மீண்டும் ஜெயலலிதாதான் முதல்வராகிறார். 41 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியுறும்.

சாதி வெறியர்கள் படுதோல்வி அடைகிறார்கள் என பதாகைகளில் குறிப்பிட்டிருந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மகேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் 8.15 மணிக்கு மகேந்திரன் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். பின்னர் நகர போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்