திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வரித்துறையினர் அதிரடி சோதனை : ரூ.20 கோடி சிக்கியது

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வரித்துறையினர் அதிரடி சோதனை : ரூ.20 கோடி சிக்கியது

வியாழன் , ஜூலை 14,2016,

சென்னை, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகள், கல்வி நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள், ஓட்டல்கள் உள்பட 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திமுகவைச் சேர்ந்தவர்  முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக  பதவி வகித்தார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வருமானவரியை சரிவர செலுத்தவில்லை என்றும், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமானவரி அதிகாரிகள் அவரது கணக்குகளை  ஆய்வு செய்த போது தெரியவந்தது.

இதை தொடர்ந்து இவருக்கு சொந்தமான  சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள், ஓட்டல், வீடுகள் ஆகியவற்றில் வருமானவரி துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து  நேற்று காலை 6 மணி முதல் 40 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள  அவரது வீடு மற்றும் அடையாறில் உள்ள அவரது வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள அக்கார்டு மெட்ரோபாலிட்டன்  நட்சத்திர ஹோட்டல், குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள  பாரத் பல்கலைக்கழகம், புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.