திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு; தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் மூ.ராசாராம் பேச்சு

திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக  முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு; தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் மூ.ராசாராம் பேச்சு

ஞாயிறு, டிசம்பர் 20,2015,

உலக பொதுமறையான திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக  முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு என தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மூ.ராசாராம் பேசி உள்ளார்.

சென்னைபல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரபு சங்கம் இணைந்து நடத்திய உலக அரபி நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை பல்கலைக் கழக மெரினா அரங்கில் நடைபெற்றது.

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் மூ.ராசாராம், அரபு பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

உலகின் மொத்த மக்கள் தொகையான 739 கோடியில் 30 கோடி பேர் அரபு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்கள். 21 நாடுகளில் அரபு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது, 1973 -ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபை அரபு மொழியை அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரித்துள்ளது.

உலகின் பழமையான மொழிகளில் செவ்வியல் கூறுகளையும் இலக்கிய செறிவுகளையும், ஆன்மிக நெறிகளையும் கொண்ட மொழி அரபு மொழி என்பதால், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் ஆத்தி சூடியையும் அரபு மொழியில் மொழி பெயர்த்தார்கள்.

சிறந்த இஸ்லாமிய இலக்கியம் படைப்போருக்கு ‘உமறுப்புலவர் விருது’ முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழுக்கும் அரபு மொழிக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கும் அரபு நாட்டிற்கும் இரண்டாயிரத்துக்கும் முன் எழுதப்பட்ட சங்க இலக்கியத்திலேயே வணிகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாகத் தமிழிலும் சுமார் ஆயிரம் அரபு சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுகா, தாசில்தார், அசல், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பைசல், பாக்கி, வாரிசு, தாக்கீது, மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், புகார், பந்தோபஸ்து, தஸ்தாவேஜு, ரத்து, முன்சீப், வகையறா எனத் தமிழில் கலந்துள்ள அரபு சொற்கள் தமிழாகவே மாறிவிட்டன.

உலகின் உயர்ந்த நூல்கள் சிறந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. திருக்குறள் தமிழிலும், பைபிள் ஹீப்ரு மொழியிலும், கீதை சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. அதைப் போல் திருக்குரான் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளதன் மூலம் அம்மொழியின் சிறப்பு விளங்கும்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப தமிழ்நாட்டு அற நூல்களை உலக மொழிகளில் குறிப்பாக, சீன மொழியிலும், கொரிய மொழியிலும், அரபு மொழியிலும் முதல்முதலாகக் கொண்டு சென்றவர் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆவார்.

உலக பொதுமறையான திருக்குறளை இஸ்லாமியர் வேதமான திருக்குரான் படைக்கப்பட்ட அரபு மொழியில் கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்டு.”இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், புதுக்கல்லு£ரி செயலாளர் மற்றும் நிறுவன பேராளர் முகம்மது அஸ்ரப் சாப் ,சென்னைப் பல்கலைக்கழக அரபு மொழித் துறை பேராசிரியர் சையது சஜ்ஜாத் ஹூசைன், புதுக்கல்லு£ரி முதல்வர் எஸ்.அப்துல்மாலிக், சென்னை பல்கலைக்கழக அரபு மொழி உதவிப்பேராசியர் ஜாகீர் ஹூசைன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.