திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவேல் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திருபரங்குன்றம் தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ சீனிவேல் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியாழன் , மே 26,2016,

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.எம்.சீனிவேல் உடல்நலக்குறைவால் நேற்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 65.  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சீனிவேல். தேர்தலில் 93,453 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மணிமாறனை 22,992 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.  உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 7.30 மணியளவில் சீனிவேல் உயிர் பிரிந்தது.  சீனிவேல், அ.தி.மு.க ஆரம்பித்த காலத்தில் இருந்து கட்சியில் உள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதய நோயாளியான அவர் கடந்த ஒரு மாதமாக தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.  வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவு, இதய நோயுடன் பக்கவாதம் ஏற்பட்டதால் சொக்கி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை காலமானார். அவரது மறைவு கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சீனிவேல் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-   மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான எஸ்.எம்.சீனிவேல் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத்தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு சீனிவேல். திருப்பரங்குன்றம் ஒன்றியக்கழக அவைத்தலைவர், ஒன்றியக்கழக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழக பணிகளை ஆற்றி உள்ளதோடு 2001 முதல் 2006 வரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணிகளை சிறப்புடன்  ஆற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புசகோதரர் சீனிவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு அவர் அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.