திருமூர்த்தி அணையில் நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு ; 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

திருமூர்த்தி அணையில் நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு ; 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

சனி, செப்டம்பர் 10,2016,

சென்னை: திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு தண்ணீர் திறந்துவிடக் கோரி, தளி வாய்க்கால் வடபூதி நத்தம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாலாறு படுகை முன்னோடி உள்ளிட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு நாளை  முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள மொத்தம் 96,987 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.