தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 102-ஆவது நினைவு நாள் தமிழக அரசு சார்பில் அனுசரிப்பு

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 102-ஆவது நினைவு நாள் தமிழக அரசு சார்பில் அனுசரிப்பு

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் உள்ள வள்ளியம்மையின் திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். அங்கு 1898-ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார்.
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக, இந்தியர்களின் உரிமைக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று வள்ளியம்மை சிறை தண்டனையை அனுபவித்தார்.
சிறையிலேயே நோயுற்ற அவர் விடுதலையான பின்னரும் நோயால் அவதியுற்று 16 வயது கூட பூர்த்தியாகாத நிலையில் 1914-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது தியாகத்தை இந்நாளில் நாம் போற்ற வேண்டும் என்றார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.நாகேந்திரன், மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மீ.செல்வக்குமார், தரங்கம்பாடி வட்டாட்சியர் என்.ராகவன், தில்லையாடி ஊராட்சித் தலைவர் என்.நடராஜன், துணைத்தலைவர் அருள்மொழி, கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி உள்ளிட்டோரும் வள்ளியம்மையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.