தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மெட்ரோ ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்?முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக உறுப்பினர்

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மெட்ரோ ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்?முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக உறுப்பினர்

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016,

மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி நின்றார்.முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக் கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா பதில் அளிக்கவில்லை.

தமிழக சட்டசபையில் தொழில்துறை மற்றும் சிறு குறு தொழில்கள் குறித்த மானியக்கோரிக்கை விவாதத்தில் தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது.,

உறுப்பினர் பேசுகின்றபோது, அண்மைக்காலமாக இங்கே, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய சில தொழில்கள் கர்நாடகத்திற்கும், ஆந்திர பிரதேசத்திற்கும் சென்று விட்டன என்று கூறினார். அப்படிச் சென்ற ஒரு நிறுவனத்தின் பெயரையாவது அவரால் குறிப்பிட முடிந்தால், நன்றாக இருக்கும். உண்மை என்னவென்றால், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் அதிபர்களையெல்லாம் அழைத்து, கூட்டங்களை நடத்தி, எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள், அங்கே தொழில் தொடங்குகள், உங்களுக்கு நிலத்தை இலவசமாக அளிக்கிறோம், இதை அளிக்கிறோம், அதை அளிக்கிறோம் என்று கூவிக் கூவி அழைத்தார்கள். ஆனால், ஒருவர் கூடசெல்லவில்லை ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால், அது வெற்றிக்கரமாக நடைபெற வேண்டுமானால், இலாபத்தை ஈட்ட வேண்டுமானால், முதல் தேவை அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, அது ஒழுங்காக காப்பாற்றப்பட வேண்டும். அது தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்று என்னால் உறுதியாக கூற முடியும். அடுத்த தேவை, தடையில்லா மின்சாரம், தரமான மின்சாரம், அது தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது. இன்றைக்கு ஆந்திர பிரதேசமாகட்டும், கர்நாடகமாகட்டும், தமிழ்நாட்டை கேட்டு, பணம் கொடுத்து, எங்களிடமிருந்து, நம்மிடமிருந்து மின்சாரத்தை வாங்குகின்ற நிலைமையில்தான் இருக்கிறார்கள். அகவே, இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும், இங்கிருந்து,கர்நாடகத்திற்கோ, ஆந்திர பிரதேசத்திற்கோ எந்த தொழில் முதலீட்டாளர்களும் செல்லமாட்டார்கள். வரிசையில் நின்று, இங்கு தமிழ்நாட்டுக்குத்தான் வருவார்கள் என்று என்னால்நம்பிக்கையுடன், உறுதியுடன் கூற முடியும் என்றார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திராவுக்கு போனது ஏன் என்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா எழுப்பிய கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில்,

உறுப்பினர்  டி.ஆர்.பி. ராஜா , தமிழ்நாட்டிலிருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள் பற்றி, ‘சென்றதாக சொல்லப்படுகிறதே’ என்று கூறியுள்ளார்.  தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலை, ஏன் இங்கு நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்று விட்டது, ஏன்அங்கு துவங்கப்பட்டது என்று விளக்கம் கூற தயாரா என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம், ‘நான் அதற்குள் போக விரும்பவில்லை’ என்றுசொல்கிறார்.  இந்தப் பிரச்சனையை ஆரம்பித்ததே உறுப்பினர்தான்.  இங்கிருந்து செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திராவிற்கும், கர்நாடகத்திற்கும் சென்றதாக, ‘பேசப்படுகிறது, கூறப்படுகிறது’ என்றார். உண்மையாகவே இங்கிருந்து ஆந்திராவிற்கு சென்ற தொழிற்சாலை, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏன் சென்றது? மெட்ரோ ரயில் இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது.  அதற்காக பெட்டிகள் தயாரிக்கப்பட வேண்டிய தொழிற்சாலை இங்கே துவங்கப்படாமல், அது ஏன் ஆந்திராவிற்கு சென்றது?  ஏன் அங்கே துவங்கப்பட்டது என்று உறுப்பினர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘அதற்குள் நான் செல்லவிரும்பவில்லை’ என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது இவ்வாறு அவர் கேட்டார்.

ஆனால் தி.மு.க. உறுப்பினர் டி,.ஆர்.பி.ராஜா சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து  சபாநாயகர் தனபால் , உறுப்பினர் ராஜா, முதல்வர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். இல்லையேல்  நான்  வேறு உறுப்பினரை  பேச அழைப்பேன் என்று பலமுறை கூறினார்.  ஆனால் ராஜா வேறு வேறு பிரச்னைகள் குறித்து பேசினாரே தவிர, முதல்வர் ஜெயலலிதா கேட்டகேள்விக்கு கடைசிவரை பதிலளிக்க முடியாமல் திணறினார்.