தீபஒளித் திருநாளுக்கு சென்னையில்இருந்து 21 ஆயிரத்து 289 சிறப்பு பேருந்துகள் ; தமிழக அரசு ஏற்பாடு

தீபஒளித் திருநாளுக்கு சென்னையில்இருந்து 21 ஆயிரத்து 289 சிறப்பு பேருந்துகள் ; தமிழக அரசு ஏற்பாடு

சனி, அக்டோபர் 15,2016,

சென்னை, தீபாவளி திருநாளை தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊரில் கொண்டாட ஏதுவாக வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலிருந்து தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 289 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக மக்கள், தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு வசதியாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. அதே போன்று, இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையம், அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம், தாம்பரம் சானிட்டோரியம் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களிலிருந்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 11 ஆயிரத்து 228 சிறப்பு பஸடகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மாநிலத்தின் இதர பகுதிகளிலிருந்து, வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 10 ஆயிரத்து 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, தீபாவளி திருநாளை முன்னிட்டு மாநகர போக்குவரத்துக் கழகம், வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 200 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 26–ந்தேதி 3 ஆயிரத்து 254 பேருந்துகளும், 27–ந்தேதி 3 ஆயிரத்து 992 பேருந்துகளும், 28–ந்தேதி 3 ஆயிரத்து 979 பேருந்துகளும் ஆக மொத்தம் 11 ஆயிரத்து 225 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதர பகுதிகளிலிருந்து 26–ந்தேதி 2 ஆயிரத்து 507 பேருந்துகளும், 27–ந்தேதி 3ஆயிரத்து 488 பேருந்துகளும், 28–ந்தேதி 4 ஆயிரத்து 069 பஸ்களும் ஆக மொத்தம் 10 ஆயிரத்து 064 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சீபுரம் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் (அரசு எஸ்.இ.டி.சி. உள்பட) தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு (மெப்ஸ்) இருந்து புறப்படும்.
பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேற்கண்ட தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகள் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் செய்யலாம்.
சென்னையில்,தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் வரும் 26, 27, 28 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் நீண்ட தூர பேருந்துகள் அண்ணா நகர் (மேற்கு) பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் (MEPZ) பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள்– பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்றடையவும், வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 200 சிறப்பு இணைப்பு பேருந்துகளை கீழ்க்குறிப்பிட்டவாறு 26, 27, 28 ஆகிய 3 நாட்களில் இயக்க உள்ளது.