தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் ; அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சனி, நவம்பர் 19,2016,

சென்னை ; முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இன்று தனி அறைக்கு மாற்றப்பட்டார். இச்செய்தியை அறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் தேவையான ஆலோசனைகளை அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றனர்.

முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 4-வது தளத்தில் உள்ள எல் வார்டு என்ற வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அதிக நேரம் தேவைப்பட்டதால், மீண்டும் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே,சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அப்போலோ மருத்துவ மனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, ‘‘முதல்வர் பூரண குணமடைந்து விட்டார். அவர் முழுமையாக குணமடைந்து பணிகளைத் தொடர இன்னும் 6 முதல் 7 வாரங்கள் ஆகலாம். அவர் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். தினமும் சில நிமிடங்கள் மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. முதல்வர் விரும்பும்போது வீட்டுக்கு செல்லலாம்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5.20 மணி அளவில் மருத்துவமனையின் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர், அதே தளத்தில் உள்ள தனி வார்டுக்கு (ஏ வார்டு) மாற்றப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்ட தகவல் அறிந்ததும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இனிப்பு வழங்கியும், ஆடிப்பாடியும், கோஷங்களை எழுப்பியும் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மருத்து வமனைக்கு வெளியே அதிமுக வினர் தேங்காய், பூசணிக்காய் உடைத்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.