முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

முதல்வர் உத்தரவுப்படி,துப்புரவு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் , டிசம்பர் 21,2015,

முதல்வர் உத்தரவுப்படி,சென்னையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் சென்று குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டனர்.
சென்னை மாநகரில் அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு துப்புரவு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். திருமண மண்டபங்கள், உள்விளையாட்டு அரங்கம், பள்ளிகள் ஆகியவற்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு அங்கு உணவு, மருத்துவ வசதி, கழிவறை வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29,848 தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் டி.டி. தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.
பல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணிகள் நிறைவு பெற்றதால் வெளியூரிலிருந்து வந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி, ஓசூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துகுடி மாவட்டங்களை சேர்ந்த 1000 பேர் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. கூடைப் பந்து உள் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் டி.டி. தடுப்பு ஊசி 100 சதவிகிதம் போடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் செய்திட சிறப்பு மருத்துவ முகாம் அங்கு அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் 400 தொழிலாளர்கள் அங்கு தங்கி உள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு, மற்றும் பிற வசதிகள் முறையாக செய்யப்படுகிறதா என்பதை இன்று மாநகராட்சி முதன்மை செயலர்–ஆணையாளர் விக்ரம் கபூர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தொழிலாளர்களை சந்தித்து கேட்டறிந்தனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் டி.டி. தடுப்பு ஊசி போடப்பட்டதாகவும் 100 சதவிகிதம் பாதுகாப்பு உபகரணங்களான கை உரை, மழைகோட், பூட்ஸ், முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சிலர் அதை முறையாக பயன்படுத்தாததால் கையில் தோல் அலர்ஜி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகிவிட்டனர் எனவும் தெரிவித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் தேவையான வசதிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியுள்ள அனைவரும் பணி முடிவடைந்ததால் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதன்மை செயலர்–ஆணையாளர் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் பொழுது மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர். கண்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.கே. குழந்தைச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.