துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை,துரோகத்தை வேரறுப்போம் : டுவிட்டரில் டிடிவி தினகரன் கருத்து

ஆகஸ்ட் 22 , 2017 , செவ்வாய்க்கிழமை,

சென்னை : துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை, துரோகத்தை வேரறுப்போம்; கழகத்தை காப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் உட்பட நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன்.,

நேற்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரதியான உடன்படிக்கை.இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.

1989-ல் தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க, ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள்.இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பன்னீர் செல்வத்தையும் பின் பழனிசாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவுக்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்.இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?.

நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர் செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ?இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும்.துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.