தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்க டாலராக உயரும் : ஒ.பன்னீர்செல்வம்

தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்க டாலராக உயரும் : ஒ.பன்னீர்செல்வம்

வியாழன் , ஜூன் 23,2016,

சென்னை:தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி வருமானம் 10 ஆயிரம் அமெரிக்கா டாலர் ஆக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது என்று சட்டசபையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:- 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 குறித்து சில சந்தேகங்களை இங்கே எழுப்பியிருக்கிறார். சில விளக்கங்களை மட்டும் நான் இங்கே சொல்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றேன். முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் ஆவணங்களை நாட்டினுடைய வளர்ச்சி குறித்து இங்கே தமிழ்நாட்டிற்கு பிரகடனப்படுத்தினார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 217 அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சம்பந்தப்பட்ட திட்டங்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் என்ற தொலைநோக்குத் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டது. இன்றைய நாள் வரை, 85 திட்டங்களின் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.  17 திட்டங்களின் பணிகள் ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலையினை அடைந்துள்ளன. 26 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  ஏனைய திட்டங்களில் 89 திட்டங்கள் திட்ட வடிவமைப்பு நிலையில் தற்போது உள்ளன.  இதுதான் இந்த 217 திட்டங்களினுடைய  இன்றைய நிலவரம்.

தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், நீங்கள், 2023 வரை பொறுமையாக இருங்கள்.  தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு, தமிழ்நாட்டின் சராசரி தனி நபர் வருமானத்தை 10,000 அமெரிக்க டாலர் அளவில் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதா அரசுக்கு உறுதியாக உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஒப்பாக மதிப்பிடப்படும் தனி நபர் சராசரி வருமானம் இருக்குமென்று முதல்வர் ஜெயலலிதாவின் நல்அரசு, இலக்கினை நிர்ணயித்துதான் இந்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  தமிழக மக்களுக்கு சர்வதேச தரமுடைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட வேண்டுமென்பது முதல்வர் ஜெயலலிதா அரசின் உயரிய நோக்கம் ஆகும்.  இந்தியாவிலேயே முதலீட்டாளர்களுக்கு உகந்த முதல் மாநிலமாகவும், ஆசிய அளவில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் தமிழகம் விளங்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் நோக்கம்.   

இந்த 217 திட்டங்களினுடைய  விரிவான விபரங்கள் என்னிடத்தில் இருக்கின்றது.  ஒவ்வொன்றாக படித்து அதனுடைய விவரங்கள் என்னவென்று சொல்ல ஆரம்பித்தால் நீண்ட நேரம் ஆகும்.  அதனால் இந்த  ஆவணத்தை சபாநாயகரிடம் நான் கொடுத்துவிடுகிறேன்.  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.,ஸ்டாலின் அங்கே நேரடியாக சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.