தொழில்துறை வளர்ச்சி குறித்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்: அமைச்சர் பி.தங்கமணி சவால்

தொழில்துறை வளர்ச்சி குறித்து ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்: அமைச்சர் பி.தங்கமணி சவால்

சனி, பெப்ரவரி 27,2016,

தொழில்துறை வளர்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவருடன் நேருக்கு, நேர் விவாதிக்க நான் தயார், என தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

நாமக்கல் குளக்கரைத் திடலில் நகர அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் நடிகை கலா, நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழக தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசியது:

தமிழக முதல்வர் பிறந்த நாளை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்து உள்ள அனைத்து திட்டங்களும் பொதுமக்களை சென்றடைந்து உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் தாலிக்கு தங்கும் வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பெண்கள் பயன் அடைந்து உள்ளனர்.

தமிழகம் அரசு 12 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 31 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நோக்கியா தொழிற்சாலை கடந்த 2005-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலையில் தினசரி 6 லட்சம் செல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஏறத்தாழ 30 ஆயிரம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.

ஆனால் கடந்த 2012-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தால் இந்த ஆலை மூடப்பட்டது. இந்த ஆலை மூடுவதற்கு காங்கிரஸ், திமுகவும் தான் காரணம். திமுகவை பொறுத்தவரை யார் முதலமைச்சர் வேட்பாளர் என, தெரியாமல் அக்கட்சியினர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மக்கள் நலக்கூட்டணியில் 4 பேரில் யாராவது ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தால், மீதமுள்ள 3 பேரும் கூட்டணியில் இருந்து விலகி விடுவார்கள்.

திமுக கூட்டணிக்காக பிற கட்சிகளை கெஞ்சி வருகிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு குஷ்புதான் காரணம். இந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறாது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் பல்வேறு பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அவர்கள் ஏற்கெனவே கொடுத்த 2 ஏக்கர் நிலம், கியாஸ் அடுப்பு வழங்கும் திட்டம் என எதையும் நிறைவேற்றவில்லை. செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். அவர்களின் வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது.

நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம். நாமக்கல் மாவட்டத்தில் திமுக இல்லை என்ற நிலையை உருவாக்க இங்கு வந்துள்ள தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். தொழில்துறை வளர்ச்சி குறித்து மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவருடன் நேருக்கு, நேர் விவாதிக்க நான் தயார், என்றார்.

முன்னதாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காந்திமுருகேசன், நாமக்கல் நகராட்சி தலைவர் கரிகாலன், துணைத் தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.