பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்,தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்,தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

புதன், ஜூன் 1,2016,

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை அருகே, பேருந்தில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், சோத்துப்பாறை அணை அருகே, பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஓரு மாணவர், சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மட்டையை இழுத்ததில், அருகிலிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் தென்னை மட்டை பட்டதால் மின்சாரம் தாக்கி பேருந்தின் உள்ளிருந்த மதுரை மாவட்டம், அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் முருகேஷ் மற்றும் திரு. சேதுராமன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முருகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.