தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா,விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் : அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில், பிரேமலதா மீது வழக்குப்பதிவு

தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா,விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் : அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில், பிரேமலதா மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2016,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியிருப்பது குறித்து, அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில் பிரேமலதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாகவும் பிரேமலதா மீது, தேர்தல் அதிகாரியிடம் அ.இ.அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருநெல்வேலியில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, சட்டமன்றத் தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தூண்டும் வகையில் பேசினார். இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில், தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக, பிரேமலதா மீது, நெல்லை டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைப்படி, வழிபாட்டுத்தலங்களில் ஓட்டு கேட்கவும், பிரச்சாரம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, தேர்தல் விதிமுறைகளை மீறி, தனது கட்சியினருடன், திருநெல்வேலி நகரில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயிலுக்குச் சென்று, தேர்தல் பிரச்சாரம் செய்ததோடு, பக்தர்களிடம் ஓட்டு கேட்டார். இதுமட்டுமின்றி, தேர்தல் விதிமுறைகளை மீறி, கோயில் வளாகத்திற்குள்ளேயே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பிரேமலதா, கோயிலுக்குள் இருந்த பொதுமக்களிடம், தான் ஓட்டு கேட்டது பற்றி தெரிவித்தார்.

பிரேமலதாவின் இந்த விதிமுறை மீறல் குறித்தும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.