தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக

திங்கள் , மே 16,2016,

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது.

அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி வலியுறுத்துகிறது.

தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அப்படியே தேர்தல் நடத்தை விதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிரதான கட்சிகளுக்கு நோட்டீஸ்:

 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் சில இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை இரண்டு கட்சிகளும் குறிப்பிடப்பிடவில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், இரண்டு கட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அவகாசம் கேட்டது திமுக:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அதிமுக தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.வெற்றிவேல் கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம்:

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவோம் என்ற விளக்கத்தை அளிக்காமல் பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும், விளக்கம் ஏதும் கூறாமலும் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.

எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி இழப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா விளக்கம்

தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.

“”எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருவேன். என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்று உறுதி அளித்திருந்தார்.

தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் பற்றி கூறமுடியாத நிலையில், இந்தத் திட்டங்களை எவ்வாறு தி.மு.க. செயல்படுத்தும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க.வின் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.