தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி, சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி,  சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

செவ்வாய், ஜூலை 05,

சென்னை, தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்த விரிவான நெறிமுறைகள் கொண்ட அரசாணையை கூட்டுறவுத்துறை செயலாளர் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையில் நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ளவர்களின் கடன்களும் தளளுபடி செய்யப்படும். மேலும் பயிர்க்கடனுக்கான அசல், வட்டி மற்றும் அபராத வட்டி ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகள் நகை மூலம் பெற்ற கடன் தொகையை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் தள்ளுபடி செய்யப்படும். கிரிமினல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவர்களின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.