தேர்தல் தோல்வி எதிரொலி : தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

தேர்தல் தோல்வி எதிரொலி : தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா

ஞாயிறு, ஜூன் 26,2016,

சென்னை : நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்றும், கட்சி தலைமையின் கட்டளையின்படியும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியது, மகளிர் அணியினரை தரக்குறைவாக விமர்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இளங்கோவனை ராஜினாமா செய்ய காங்., மேலிடம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கோஷ்டி பூசலில் இருந்த தமிழக காங்கிரசில், தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு பிறகு, கட்சிக்குள் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் அணியினரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இளங்கோவன் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை தி.மு.க.விடமிருந்து வலியுறுத்தி பெறாதது, பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது, அக்கட்சியினர் எழுப்பியிருந்தனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இளங்கோவனின் அணுகு முறைதான் காரணம் என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள எதிர் கோஷ்டி தலைவர்கள் கூறும்போது, “தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறாததற்கு காரணம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான். அதன் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனை முன்கூட்டி அறிந்து கொண்ட அவர் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவித்தனர்.