தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

வெள்ளி, மார்ச் 11,2016,

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்துடன்கூடிய இரு சக்கர வாகனங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சியினருக்கு இலவசமாக வழங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது உருவப்படத்துடன், நெல்லை மத்திய மாவட்டக் கழகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்கள், வாக்காளர்களுக்கு இன்று காலை விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் அ.இ.அ.தி.மு,க.வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, அ.இ.அ.தி.மு,க.வினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு பறக்கும் படையினர் விரைந்து வந்து, வாகன விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்ததோடு, அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.குறித்தும் கேட்டறிந்தனர். இதையடுத்து, தொடர்புடைய டீலர் அலுவலகத்துக்கு பறக்கும் படை அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான குழு விரைந்து வந்தது. இந்தக் குழுவினர் வருகையை அறிந்தவுடன் ஸ்டாலின் உருவப்படத்துடன் இருந்த ஸ்கூட்டர்களை அந்தக் கட்சியினர் அதிவிரைவாக எடுத்துச் சென்றனர். இருப்பினும், ஒரு ஸ்கூட்டரை இந்தக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் குழுவினர், ஸ்கூட்டர் வழங்கிய நிறுவனத்தின் ஆவணங்களைப் பெற்று ரசீதுகளை தேதிவாரியாக சரிபார்த்து வருகின்றனர்.

அதிமுக தரப்பில், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மு.கருணாகரனிடமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், புகார் தொடர்பாக டீலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்தால் உரிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.