‘தொடங்கட்டும், தொடரட்டும்’ எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

‘தொடங்கட்டும், தொடரட்டும்’  எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

வியாழன் , மார்ச் 10,2016,

`தொடங்கட்டும்.. தொடரட்டும்..’ என்ற பிரச்சார வாசகங்களுடன் திருநெல்வேலியில் களமிறங்கியி ருக்கிறார் அதிமுக பேச்சாளர் எம்.சி.அப்துல்காதர்.

திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த இவர், தற்போது தினமும் 40 கி.மீ. தூரத்துக்கு சைக்கிளில் சுற்றிவந்து கட்சி நிர்வாகிகள், பேச்சாளர்களை சந்தித்து உற்சாகமூட்டி வருகிறார்.

மேலப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளராகவும், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அப்துல்காதர், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2001-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவரது மனைவி ஷகர்பானு அதிமுக வார்டு துணைச் செயலாளர்.

பிரச்சாரக் கூட்டங்கள்

கடந்த திமுக ஆட்சியின்போது மேலப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற அதிமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், சிறிய பொதுக்கூட்டங்களில் எல்லாம் ஒலிபெருக்கி முன் பேசிப்பேசி சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்டார் அப்துல் காதர். தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு பேச்சாள ராக செல்கிறார்.

சைக்கிளில் பயணம்

தற்போது திருநெல்வேலி மாநகரப் பகுதியை தினமும் சைக்கிளில் சுற்றுகிறார். கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர் களையும் சந்தித்து அவர்களுக்கு உற்சாகமூட்டுகிறார்.

இந்த பயணத்துக்கு பயன்படுத்தும் சைக்கிளின் முன்புறம் அலுமினிய பலகையில் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்களும், `2016-ல் 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெற்று அம்மாவின் ஆட்சி தொடங்கட்டும், தொடரட்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

திருநெல்வேலியில் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த அப்துல் காதர் செய்தியாளரிடம் கூறியதாவது:

`ஏழ்மையில் இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து பணியாற்றுகிறேன். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின் முழுவீச்சில் பொதுக் கூட்டங்களிலும், தெருமுனைப் பிரச்சாரங்களிலும் பேசுவேன். மாநில பேச்சாளராக வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்’ என்றார் அவர்