கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆகஸ்ட் 10 , 2017 ,வியாழக்கிழமை,

விழுப்புரம் : குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கைப்பரப்பு செயலாளருமான தம்பிதுரை சிறப்புரையாற்றினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நம்முடைய குழந்தைகள் சிந்திக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தன் குழந்தைக்கு என்னென்ன செய்யவேண்டுமென்று நினைத்து, நினைத்துப் பார்த்து செய்து கொடுத்திருக்கின்றார். ஆகவே நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, கரு உதிக்கின்றபொழுதே அந்தக் குழந்தை நன்றாக வளர வேண்டுமென்பதற்காக, ரூபாய் 6000-லிருந்து ரூபாய் 12,000ஆயிரம் வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கினார்கள். ரூபாய் 12,000-லிருந்து ரூபாய் 18,000 ஆயிரம் வழங்கினார்கள். ஆகவே, கரு உருவாகின்ற பொழுதுகூட அந்தக் கரு நன்றாக வளர வேண்டுமென்று சிந்தித்து, சிந்தித்து சேவை செய்த தலைவி ஜெயலலிதா. ஆகவே தான் தெய்வத்திற்குச் சமமாக ஜெயலலிதாவை நாம் எண்ணுகின்றோம். அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்த பிறகு, நான் ஏற்கனவேகுறிப்பிட்டதைப் போல, 16 வகையான பொருட்களைக் கொடுக்கின்றார்கள்.

அம்மா பரிசுப் பெட்டகம் பெறுகின்ற குழந்தை அம்மாவினுடைய உதவிபெறுகின்றது என்று சொன்னால், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான், வேறு எங்கும் கிடையாது. ஆகவே பிறக்கின்ற ஏழைக் குழந்தைகூட சுகாதாரமாய் இருக்க வேண்டும். இந்த பூமியில் பிறந்த அத்தனை குழந்தைகளும் நன்றாக வளர வேண்டுமென்று தாயுள்ளத்துடன் சிந்தனைசெய்து, திட்டம் தீட்டிய ஒரே முதலமைச்சர் நம் முதல்வர் ஜெயலலிதாதான். ஆகவே, ஏழைகளை வாழ வைத்த தெய்வம், ஜெயலலிதா. இன்றைக்கு தெய்வமாக மாறியிருக்கின்றார்கள். அந்த தெய்வத்தினுடைய ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எத்தனையோ பேர் எனக்கு முன்னாலே, சட்டத்துறை அமைச்சர்.சி.வி.சண்முகம் அழகாகக் குறிப்பிட்டார். இந்த ஆட்சி இருக்குமா, இருக்காதா, எத்தனை நாள் எண்ணப்படும் என்றெல்லாம் சொன்னார். ஆகவே, நான் இந்த நேரத்திலே சொல்கின்றேன். இங்கே அமர்ந்திருக்கின்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் போல் அங்கே அமர்ந்திருக்கின்ற அத்தனை அமைச்சர்களும், இங்கே இருக்கின்ற அத்தனை கழகத் தொண்டர்களும் இருக்கின்றபொழுது, வேறு யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி மக்களுடைய ஆட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும், உயர வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி, உங்கள் ஆட்சி, உங்களுடைய ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. நீங்கள்இருக்கின்றவரை இந்த மண்ணிலே எவராலும் சிந்திக்க முடியாது.

நாட்டில் தேர்தல் நடத்துவதுபோல் காட்டிலும் விலங்குகளுக்கு யார் தலைவன் என தேர்தல் நடந்தது. பொதுவாக காட்டுக்கு சிங்கம்தான் தலைவனாக இருக்கும். ஆனால் புலி, தலைவன் பதவியை அடைய பல சூழ்ச்சிகளை கையாண்டது. அதற்காக நரியை அழைத்த புலி, நான் சிங்கம் கறியை ருசித்தது இல்லை. சிங்கத்தின் கறியை நீ எடுத்து வந்தால் நான் தலைவன் ஆகிவிடுவேன், நீதான் காட்டுக்கு ராஜா என்று புலி ஆசை கூறியது.

அதை நம்பி நரி, யானையிடம் சென்று நீ பலசாலி, சிங்கத்தை எதிர்த்து தேர்தலில் நின்றால் நீதான் வெற்றிபெறுவாய் என்று கூறியது. மேலும் அந்த நரி, சிங்கத்திடம் சென்று உன்னை எதிர்த்து யானை தேர்தலில் நிற்கிறது என்று கூறியது. இதை கேட்ட சிங்கம், யானையை வரவழைத்து நடந்த விவரத்தை கேட்டது. அதற்கு யானை, நான் தேர்தலில் நிற்பது பற்றி சொல்லவில்லையே என்றது. நரியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட சிங்கம், காக்கையை அழைத்து நரிக்கு பரிசு வைத்திருப்பதாகவும், அதனை அழைத்து வருமாறும் கூறியது. அதன்படி பரிசு பெறுவதற்காக நரி ஓடி வந்தது. அப்போது சிங்கமும், யானையும் ஒன்றாக சகஜமாக இருந்ததை கண்டு நரி அச்சத்துடன் சென்றது. கடைசியில் புலி மற்றும் நரியின் சூழ்ச்சி பலிக்கவில்லை.

காட்டில் பல சூழ்ச்சிகள் நடைபெற்றதுபோல், நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்களது சூழ்ச்சி வெற்றிபெறாது. மற்றவர்கள் செய்யும் குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.