தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம் : மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம் : மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

செவ்வாய், ஜூலை 19,2016,

கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார்.

சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். முதல்வரை பார்த்து சிஷ்யா பள்ளி மாணவர்கள் கையசைத்தனர். இதை கவனித்த முதல்வர், தன் அலுவலகத்துக்கு சென்றதும், பள்ளி மாணவர்கள் யார் என்பதை விசாரித்ததுடன், அவர்களை தன் அலுவலகத்துக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகளும், மாணவர்கள், ஆசிரியர்களை அழைத்து வந்தனர். மாணவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா உரையாடினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா மாணவர்களிடையே பேசிய தாவது:

உங்களை இங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் அனைவரும் வரலாற்று பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க இங்கு வந்துள்ளீர்கள். இது உங்களுக்கு நிறைய தகவல்களையும், புதிய விஷயங்களையும் கற்றுத்தரும் என நம்புகிறேன். நானே எதிர்பார்க்காத இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இளம் மாணவர்களாகிய உங்களைப் பார்த்து, சந்தித்து, உரையாடும் நல்வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. உங்களுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். உங்கள் நடத்தை மற்றும் அணுகுமுறைக்காக உங்கள் ஆசிரியர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர்கள் உங்களை மிகச் சிறந்தவர்களாக உருவாக்கியுள் ளனர். இந்த வயதில் நீங்கள் அனைவரும் முக்கியமாக உங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி சார்ந்த கூடுதல் விஷயங்களிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஆனால், முழு நேரத்தையும் கணினி, தொலைக்காட்சி பார்ப்பதிலும், வீடியோ கேம் விளையாடுவதிலும் செலவழிக்கக் கூடாது. நீங்கள் வெளியில் சென்று உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளிலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் துறைகளில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எந்த நேரத்திலும் தமிழக அரசு சார்பில் எந்த உதவி தேவைப்பட்டாலும் நாங்கள் இங்கு இருக்கிறோம். உங்களுக்கும், உங்கள் பள்ளிக்கும் எந்த உதவி தேவைப்பட்டாலும் அளிக்கப்படும். உங்களைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.