நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016,

சென்னை;நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஒர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழும் வண்ணமும் அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களை தீட்டியும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மடக்குக் குச்சிகள் மூலம் மிக அருகில் உள்ள பொருட்களை மட்டுமே அறிந்து கொள்ள இயலும். எனவே, நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த குச்சிகள் மூலம் அவர்கள் அதிக தூரத்தில் உள்ள பொருட்களையும் உணர்ந்து கொள்ள இயலும். இதன் காரணமாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்கு தடையின்றி பயணிக்க இயலும். இந்த ஆண்டு 5,000 பயனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும். இந்த திட்டம் 1கோடியே 58 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
2. காது கேளாமையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் இந்த குறைபாட்டை நீக்கிட இயலும். எனவே, இதற்கென ஒரு முன்னோடி திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். காது கேளாத குழந்தைகள் சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளனர். எனவே, இந்த மாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் ஒரு சிறப்பு பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் 11 மாநகர தாய்சேய் நல மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சிவகங்கை மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

3. புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதம், நுண்ணறிவு திறன் மற்றும் மரபு வழி குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பேச்சு மற்றும் மொழி திறனை மேம்படுத்திடும் வகையில் மாற்று தகவல் பரிமாற்ற முறை செயல்படுத்தப்படும். இத்தகைய சிறப்பு குழந்தைகள், படங்கள் மற்றும் இதர மாறுபட்ட முறைகளில் மற்றவர்களுடன் கலந்துரையாட பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்தின்படி தொடு திரையுடன் ஆவாஸ்” AAVAAZ என்னும் சிறப்பு மென்பொருளுடன் கூடிய கையடக்க கணினி i-Pad மூலம் சிறப்பு குழந்தைகளிடமுள்ள தகவல் பரிமாற்ற குறைபாடு களையப்படும். மேலும், சிறப்பு குழந்தைகள் வகுப்பறையில் துடிப்புடனும் மிகவும் திறமையுடனும் கல்வி கற்கவும்,மற்றவர்களுடன் உரையாடவும் இத்திட்டம் பயனளிக்கும். முதல்கட்டமாக இந்த சிறப்பு வசதிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் நடமாடும் சிகிச்சை பிரிவுகள் மூலம் பயனடையும் குழந்தைகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் 416 குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.