நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் நாகை மீன்வளத்துறை உதவியுடன் கரை திரும்பினர் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

நடுக்கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் நாகை மீன்வளத்துறை உதவியுடன் கரை திரும்பினர் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் நன்றி

திங்கள் , ஜூன் 27,2016,

நடுக்கடலில் என்ஜின் பழுதாகி கடந்த 5 நாட்களாக தத்தளித்து வந்த நாகை மீனவர்கள், அம்மாவட்ட மீன்வளத்துறை உதவியுடன் கரை திரும்பினர். தங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கரை திரும்பிய மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், கடந்த 14-ம் தேதி இரவு, படகு ஒன்றில் மீன்பிடிக்கச்சென்றனர். வழக்கமாக 20-ம் தேதிக்கு திரும்ப வேண்டிய படகு கரைக்கு வராததால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்கள், கடலில் படகை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகுகளை வயர்லஸ் கருவிகள் மூலம் தொடர்பு கொண்டதில், நாகையில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் உள்ள பழையார் கடல் பகுதியில் படகு ஒன்று பழுதடைந்து இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மீனவர்களின் உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர், நாகை மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, நாகை மீன்வளத்துறையினர் உதவியுடன், இந்திய கடலோர காவல் படையினர், கப்பல் மற்றும் விமானம் மூலம் மீனவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, மீனவர்களையும், அவர்களது படகையும் பத்திரமாக நாகை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். தங்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மீனவர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.