நம் விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

நம் விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் இது: அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,

2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: –

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்களுக்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் விழிப்புடன் பணியாற்றி ஜனநாயக வயலில் இருந்து நம்முடைய விளைச்சலை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தேர்தல் சம்பந்தமாக நான் குறிப்பிடும் பின்வரும் பணிகளை நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை இடுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, 31.1.2016 ஞாயிற்றுக்கிழமையும், 6.2.2016 சனிக்கிழமையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருப்பதை நீங்கள் அறிவீர்கள். 20.1.2016 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்களில் சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ள இந்த முகாம்கள் நடைபெற இருக்கின்றன. இந்த இரண்டு நாள் முகாம்களையும் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை பின்வருமாறு சரி பார்க்க வேண்டும்.

கழகத்தின் பூத் ஏஜெண்ட்டுகள் தங்கள் வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட வேண்டும். இருப்பிடம் மாறி (குடியெர்ந்து) சென்றிருக்கும் வாக்காளர்களுடைய பெயர்களும், இறந்துபோன வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதற்கான சான்றுகளோடு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.

18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தால் உரிய படிவத்தில் அது குறித்த சான்றுகளோடு அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் வேறு ஏதேனும் பிழைகள் அல்லது மாற்றங்கள் இருந்தாலோ; முகவரி மாற்றம் இருந்தாலோ அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் 31.1.2016 மற்றும் 6.2.2016 ஆகிய நாட்கள் மட்டுமே நடைபெற இருப்பதால், கழக நிர்வாகிகள் அனைவரும் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி உரிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் பேராதரவு பெற்று விளங்கும் ஆட்சியை நடத்தி வரும் எனது தலைமையிலான ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‘ விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

மேல் வகுப்பிற்கு செல்ல ஆர்வத்துடன் இருக்கும் ஒரு நல்ல மாணவன் தேர்வை ஆவலுடன் எதிர்கொள்வதைப் போல, கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்றத் துடிக்கும் அற்புதமான மக்கள் நல பணிகளை எனது தலைமையிலான கழக அரசு செய்திருப்பதால், சட்டமன்றப் பொதுத் தேர்தலை அ.தி.மு.க. ஆவலோடு எதிர்கொள்ளக் காத்திருக்கிறது.

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் அ.தி.மு.க. வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்திடும் என்று நான் உறுதிபட நம்புகிறேன். தேர்தல் களத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகளைப் பற்றி உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அவ்வப்போது உங்களுக்குத் தெரிவிப்பேன். என்னுடைய வழிகாட்டுதலில் அந்த பணிகளை நீங்கள் வெற்றிகரமாகக் கடமை உணர்வுடன் செய்து முடித்திட வேண்டும்.

‘‘அ.தி.மு.க.’’ என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தலைமை ஏற்ற நாளில் இருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணற்ற வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாடே திரும்பிப் பார்த்து வியப்படையும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றதைப் போலவும், இன்னும் ஒரு படி கூடுதலாக அதைவிடவும் சிறப்பான வெற்றியைப் பெறும் வகையில் நான் திட்டமிட்டு உழைத்து வருகிறேன். என்னுடைய பாதையில் களப்பணியாற்றிட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு. என்னுடைய வெற்றி கழகத்தின் வெற்றி. என்னுடைய உழைப்பு தமிழகம் உயர்ந்திடவே. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரட்டும் என்று கூறியுள்ளார்.