நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 06, 2016,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதுக்கான ரொக்கப்பரிசை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ள முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் S. ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், மாணவ-மாணவியருக்கு கல்விச் செல்வத்தைப் புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என, ஆசிரியப் பெருமக்களுக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். பள்ளிக் குழந்தைகளுக்காகவும், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையிலும் தமது அரசு செயல்படுத்திவரும் எண்ணற்ற திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும், பல்வேறு பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்துவரும் ஆசிரியர்களில், விருதுபெற தேர்வுசெய்யப்பட்ட 379 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, இவ்விழாவில் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. க. பாண்டியராஜன், இவ்விருதுகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர், மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ தேர்ச்சிபெறும் மாணவ-மாணவியரில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர், உயர்கல்வி பயிலவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சர்  ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் திருமதி. த. சபிதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி. மைதிலி ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி பூஜா குல்கர்னி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கான ரொக்கப்பரிசை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, ஆசிரியர் சமுதாயத்திற்கு மென்மேலும் பெருமை சேர்த்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆசிரியர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுளையும் தெரிவித்தனர்.