நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

வியாழன் , மார்ச் 17,2016,

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.4½ லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தனக்கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது.

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில், அமைதி வழியில் தனது அன்பால் விளங்கிய நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு 459-வது கந்தூரி திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ஆண்டுதோறும் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்காக தமிழக அரசு சார்பில் 40 கிலோ சந்தன கட்டைகள் வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 40 கிலோ சந்தன கட்டைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து சுமார் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 400 மதிப்பில் 40 கிலோ ஜஜ்போகல் ரக சந்தன கட்டைகள் ஈரோடு சத்தியமங்கள காட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த சந்தன கட்டைகள் 1, 2 கிலோ துண்டுகளாக பிரிக்கப்பட்டு பன்னீரில் ஊறவைத்து, ஜவ்வாது உள்ளிட்ட வாசனை பொருட்கள் சேர்க்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு பாரம்பரிய முறையுடன் நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பில் முறைப்படி சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது. இங்கு அரைக்கப்படும் சந்தனம் வருகிற 19-ந்தேதி மாலை நடைபெறும் சந்தனக் கூடு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டு, 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 4 மணிக்கு ஆண்டவரின் சமாதியில் பூசப்படும். ஆண்டுதோறும் சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு சந்தன கட்டைகளை வழங்கிவரும் தமிழக அரசுக்கு தர்கா நிர்வாகிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.