நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துகள் மீட்கப்பட்டு  உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , மே 12,2016,

திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள்-சொத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கூறினார்.
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு பேசினார்.
 சென்னையில் ஒரே நாளில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலந்தூர் தொகுதி ஆகியவற்றில் ஜெயலலிதா புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, பிற்பகல் 3.25 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டார்.
 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக ஐஸ்-ஹவுஸ் வந்தடைந்த அவர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
 அதைத் தொடர்ந்து, சூளை (துறைமுகம்), மூலக்கொத்தளம் (ராயபுரம்), சத்தியமூர்த்தி நகர் (பெரம்பூர்), ஓட்டேரி பாலம் (திரு.வி.க. நகர்), அயனாவரம் (கொளத்தூர்), கொன்னூர் நெடுஞ்சாலை (வில்லிவாக்கம்), கோயம்பேடு (விருகம்பாக்கம்), எம்.எம்.டி.ஏ., காலனி (அண்ணா நகர்), புஷ்பா நகர் (ஆயிரம் விளக்கு), தியாகராய நகர் பேருந்து நிலையம் (தி.நகர்), சைதாப்பேட்டை பனகல் மாளிகை (சைதாப்பேட்டை), கிண்டி கத்திப்பாரா (ஆலந்தூர்), மலர் மருத்துவமனை அருகில் (வேளச்சேரி), மயிலாப்பூர் மாங்கொல்லை (மயிலாப்பூர்) ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
 கொளத்தூர் தொகுதியில், அவர் பேசியது:
 முந்தைய திமுக ஆட்சியின்போது, மக்கள் பல கொடுமைகளை அனுபவித்தீர்கள். அப்போதிருந்த மின்வெட்டால் மக்கள் அனுபவித்த கஷ்டங்களை மறக்கவே முடியாது. 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் படிக்க முடியவில்லை.
 தமிழகமே இருளில் மூழ்கி இருந்தது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. நில அபகரிப்பாளர்களால் மக்களின் சொத்துகளும், நிலங்களும் அபகரிக்கப்பட்டன.
 நிலங்கள்-சொத்துகள் மீட்பு: கடந்த ஐந்தாண்டு காலமாக அதிமுக அரசு மக்களின் வாழ்வில் வசந்தத்தைக் கொடுத்துள்ளது. இப்போது தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.
 சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நில அபகரிப்பாளர்கள் மீது காவல் துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்களும், சொத்துகளும் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டன என்றார் முதல்வர் ஜெயலலிதா.
62 கிலோ மீட்டர், 42 பகுதிகள்…!
 சென்னையில் ஒரே நாளில் 62.3 கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்து, 42 பகுதிகளில் 16 வேட்பாளர்களுக்காக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
 அவர் போட்டியிடும் ஆர்.கே.நகரைத் தவிர்த்து பிற தொகுதிகளில் வாக்கு சேகரிக்க, புதன்கிழமை பிற்பகல் 3.25 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டார்.
 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கி, மயிலாப்பூர் தொகுதியில் தனது பிரசாரத்தை மாலை 6.45 மணியளவில் நிறைவு செய்தார்.
 அப்போது, சாலையின் இருபுறமும் அதிமுகவினரும், பொது மக்களும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர். மொத்தமாக, 62 கிலோமீட்டர் பயணம் செய்து 42 பகுதிகளைக் கடந்து 16 வேட்பாளர்களுக்காக முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.