நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான மசோதா ; தமிழக சட்டபேரவையில் நிறைவேறியது

நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான மசோதா ; தமிழக சட்டபேரவையில் நிறைவேறியது

வியாழக்கிழமை, பிப்ரவரி 02, 2017,

சென்னை : நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான மசோதா உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் தமிழக சட்டபேரவையில் நேற்று ஒரே நாளில் ஆய்வுக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டசபை கடந்த 23-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. 27 மற்றும் 30ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் உறுப்பினர்களுக்கு பதிலளித்தார். நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு உள்ளிட்ட 12 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு, சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களில் அனுமதியின்றி கழிவுநீர் விடுவதை தடை செய்யவும், மேலும் அதனை தடுக்கும் வகையில் அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான சட்டமுன்வடிவு உள்ளிட்ட 12 சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. மேலும், பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு, பொது கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, உரிமை குழு உள்ளிட்டவற்றிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.