நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

வியாழன் , செப்டம்பர் 22,2016,

நீலகிரி மாவட்ட தொழில் குழுக்களுக்கு போக்குவரத்து வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும்,இடுபொருள் சேமிப்பு மற்றும் பசுந்தேயிலை கொள்முதல் மையம் அமைத்திட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடனுதவி ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக, 5 குழு உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளையும் காசோலைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஒரே வகையான சிறுதொழில் செய்வோரை, கிராம அளவில் ஒருங்கிணைத்து தொடர் சேவைகளை மேம்படுத்தும் வகையில், “பூச்சரம்’ என்ற ஒத்த தொழில் குழு உருவாக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் புதிதாக 50 குழுக்களும், 3 இதர தொழில் குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்தத் தொழில் குழுக்கள், இந்திய தேயிலை வாரியத்தில் பதிவு செய்து சுழல் நிதி-இதர உதவிகள் பெறும் வகையில், தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு குழு செயல்பாடு, பதிவேடுகள் பராமரித்தல், தொழில்நுட்பப் பயிற்சி ஆகியன வழங்கப்பட்டு, தமிழக அரசின் உட்கட்டமைப்பு நிதியாக ரூ.53 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் குழுக்களுக்கு 50 போக்குவரத்து வாகனங்களையும், இடுபொருள் சேமிப்பு, பசுந்தேயிலை கொள்முதல் மையம் உள்ளிட்டவற்றை வழங்கும் அடையாளமாக 5 குழுக்களுக்கு அவை அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.