நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 10 பேரை மீட்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 10 பேரை மீட்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, ஜூலை 31,2016,

கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை மீட்டு அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுக்கு உரிய  உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு.,

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் வசித்துவரும் 19 பேர் கொண்ட ஒரு குழு நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்திற்கு கடந்த ஜூலை 20-ம் தேதி பக்திச் சுற்றுலா சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவர்களில் 10 பேர் தவித்து வருவதாகவும் ஊடகங்களில் 28.07.2016 அன்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து,

முதல்வர் ஜெயலலிதா நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்புகொண்டு உடனடியாக உரிய மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  தமிழக அரசு அதிகாரிகள் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேரும் ஜாம்ஷாம் நகரில் பத்திரமாக உள்ளதாகவும், பருவநிலை சீரடைந்த பிறகு அவர்கள் அனைவரும் பொக்காரோவில் உள்ள அவர்களது குழுவினருடன் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் பொக்காரோவிலிருந்து காத்மண்டு வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தமிழக அதிகாரிகள் இந்த 10 பேர் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.  சென்னை, அமைந்தகரையை சேர்ந்த ப.கணேஷ் தனது தகப்பனார் மற்றும் உறவினர்கள் மொத்தம் 10 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்குச் சென்றபோது பருவநிலை காரணமாக அங்கு சிக்கித் தவிப்பதாக தெரிவித்து அவர்களை காப்பாற்றுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றினை தமிழக அரசுக்கு அளித்துள்ளார்.  30.7.2016 அன்று இந்திய தூதரகத்துக்கான முதல் செயலாளர் பிரணவ் கணேஷ் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளரைத் தொடர்பு கொண்டு ஜாம்ஷாம் நகரில் பருவநிலை இன்னும் சீராகவில்லை என்றும், எனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேரும் ஹெலிகாப்டர் மூலமாக பொக்காரோ நகரத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும்,அங்கிருந்து காத்மண்டுவிற்கு விமானம் மூலம் அவர்கள் செல்ல இயலும் என்றும் தெரிவித்து ஹெலிகாப்டர் பயணச் செலவினத் தெகையான ரூ.2.10 இலட்சத்தினை தமிழ்நாடு அரசு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  முதல்வர் ஜெயலலிதா மோசமான பருவநிலை காரணமாக ஜாம்ஷாம் நகரில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் பொக்காரோ நகரத்திற்கு அழைத்துவர ரூ.2.10 இலட்சத்தை இந்திய தூதரகத்துக்கு உடன் செலுத்துமாறும், நேபாள நாட்டில் சிக்கிய 10 பேரை பத்திரமாக மீட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைத்து பின்னர் பின்னர் சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.