நேர்காணல் : கருணாநிதி மீதுள்ள கோபத்தால் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு

நேர்காணல் : கருணாநிதி மீதுள்ள கோபத்தால் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு

புதன், பெப்ரவரி 24,2016,

கருணாநிதி மீதுள்ள கோபத்தால் உடல் நலத்தைக் காரணம் காட்டி மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணலைப் புறக்கணித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
திமுகவில் வேட்பாளர் நேர்காணல் திங்கள்கிழமை (பிப்.22) தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வேட்பாளர்களை நேர்காணல் செய்தனர்.
தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தொகுதியைக் கூட்டணிக் கட்சி ஒதுக்கலாமா? தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பன போன்ற பல்வேறு கேள்விகளை நேர்காணலில் பங்கேற்றோரிடம் கேட்கும் பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.
2-ஆம் நாளன்று…: சில நேரங்களில் இடையில் குறுக்கிட்டு, கருணாநிதி கேள்வி கேட்டதைத் தவிர்த்து, பிற கேள்விகள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினே கேட்டார். ஆனால் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
வேட்பாளர் தேர்வில் தாமதம்: முதல் நாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டுமே நேர்காணல் நடைபெற்றது. இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். அது காலை 10 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை நீடித்தது. அதன் பிற மாவட்டங்களுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டு மார்ச் 7-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒரே நேரத்தில் 7 பேரில் இருந்து, 10 பேர் வரை ஒன்றாக வைத்து, நேர்காணல் நடத்திவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் கருத்துக் கூறியுள்ளார். இதனை கருணாநிதி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
வேட்பாளர் தேர்வில் பிரச்னை: மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு முழுமையும் மு.க.ஸ்டாலின் வசம் விடப்பட்டிருந்தது. கருணாநிதி, கனிமொழி ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. திமுகவுக்குத் தொடர்பு இல்லாத தொழிலதிபர்களும், ஸ்டாலின் குடும்பத்தாருக்கு உரியவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதனால், கட்சியினரே நடத்திய உள்ளடி வேலைகளால் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோற்றனர்.
மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பல முனைப் போட்டிக்கு வாய்ப்பு உள்ளதால், தொகுதியில் செல்வாக்கு பெற்ற நபரை நிறுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கருணாநிதி கருதுகிறார்.
இதனால் வேட்பாளர் தேர்வில் கோட்டைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக மாவட்டச் செயலாளர்களை அனுமதிக்காமல் நேர்காணலை கருணாநிதியே மேற்கொள்கிறார். நேர்காணலில் பங்கேற்போருக்கு தலா 3 நிமிஷம் நேரம் ஒதுக்கி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மேலும், ஸ்டாலின் தலையீடு இல்லாத வகையிலும் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் காரணமாக நேர்காணலை ஸ்டாலின் புறக்கணித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேர்காணலில் ஸ்டாலின் இருக்கையில் துரைமுருகனை அமர்த்தி கேள்விகள் கேட்க கருணாநிதி அனுமதித்துள்ளார். இந்த விவகாரம் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.