நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் சம்பத்

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் சம்பத்

புதன், ஜூலை 27,2016,

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எழிலரசன் பேசும்போது, நோக்கியா தொழிற்சாலை தமிழகத்திலிருந்து சென்றுவிட்டது. ஒரு ஆலையை மூடிவிட்டுச்செல்வது என்றால் முறைப்படி அரசுக்குத் தெரிவித்துவிட்டு, அதற்கு அரசு அனுமதித்ததற்குப் பிறகே செல்ல முடியும். அப்படி ஒரு நடைமுறை நடைபெற்றதா என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, தொழில்துறை அமைச்சர் சம்பத் குறுக்கிட்டுப் பேசியது: மத்திய அரசு 2012-இல் கொண்டு வந்த முன்தேதியிட்ட வரியின் காரணமாகத்தான் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. இதன்விளைவாக நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றிய 8 ஆயிரம் பேர் பணி இழந்தனர்.

நோக்கியா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்களைப் புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவினை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன்பேச்சுவார்த்தை நடத்த தைவானுக்கு அனுப்பியது. அந்தக் குழுவில் தமிழ்நாடு அரசும் இணைந்து கொள்ள மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்துணைத் தலைவர் ஆகியோர், ஃபாக்ஸ்கான்நிறுவனத்தின் தலைவர் டெரி கெள-வை 2016 மே 30-இல் தைவானில் நேரில் சந்தித்து,ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைப் புதுப்பித்தலை ஊக்கப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்ய விழையும் தமிழக அரசின் விருப்பத்தினைத் தெரிவிக்கும் தமிழக முதல்வரின்கடிதத்தினையும் வழங்கினார்.

தமிழக அரசின் ஆதரவினை வரவேற்ற ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் மேற்காணும் நிறுவனங்களை 2016-க்குள் துவங்குவதற்கு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரை முதல்வர் ஜெயலலிதா ஜூன் 14-ஆம் தேதியில் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் நோக்கியா தொழிற்சாலையைப் புத்துயிர் ஊட்டுவதற்காக தமிழக அரசு எடுத்து வரும்முயற்சிகளுக்கு வருமான வரித் துறையின் ஆதரவினை உறுதிப்படுத்துவதற்கு பிரதமர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வலியுறுத்தினார்.

இந்தத் தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் சம்பத் கூறினார்.