படகு கவிழ்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் : தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

படகு கவிழ்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் : தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி அமைச்சர்கள் நேரில்  ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017,

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடல் பகுதியில் நேற்று முன்தினம் தனியார் படகில் சவாரி சென்றபோது படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கடல் பகுதியில் மீனவர்களுடன் கடலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களில் 10 பேர் படகு விபத்துக்குள்ளானதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, இக்குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, நேற்று தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 11 பேரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், அவர்களின் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கினார்.