பயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 24,2016,

சென்னை:குறித்த காலத்தில் பயிர்க்கடனை செல்லும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி தொடரும் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:”

உணவு தானிய உற்பத்தியில் கடும் வறட்சி நிலவிய 2012-2013-ஆம் ஆண்டை தவிர ஏனைய ஒவ்வொரு ஆண்டும், உயரிய சாதனைகளை எனது தலைமையிலான அரசு படைத்து வந்துள்ளது.சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரமான விதைகள், இதர இடுபொருட்கள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு உணவு தானிய உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது.உரங்கள் மற்றும் வேளாண் கருவிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழி வகை செய்யும் வகையில் உரங்கள் வாங்கி, விற்பனை செய்ய ஏதுவாக நிறுவனத்திற்கு வட்டியில்லா முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் எப்போதும், தண்ணீர் பற்றாக் குறை உள்ள மாநிலம் என்பதால் நுண்ணீர்ப் பாசன திட்டங்களுக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. நுண்ணீர்ப் பாசன அமைப்பை ஏற்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 23,214 கோடி ரூபாய்  கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்படி, 811 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை, குறைக்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கையில், கொடுத்த வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் நடுத்தர கால வேளாண்மைக் கடன், மற்றும் பண்ணைச் சார்ந்த நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்திட நான் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன். தொடர்ந்து வழங்கப்படுவதுடன், பயிர்க் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.