பயிர்க்கடன் தள்ளுபடி, 500 டாஸ்மாக் கடைகள் மூடல்,உள்பட 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

பயிர்க்கடன் தள்ளுபடி, 500 டாஸ்மாக் கடைகள் மூடல்,உள்பட 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா

திங்கள் , மே 23,2016,

ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் பயணங்கள் இனியும் மக்களை நோக்கியே தொடரும்.

15-வது சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யா செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, திண்டுக்கல் சி.சீனிவாசன் உள்பட 28 பேர் இரண்டு கட்டங்களாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைச் செயலகம் சென்ற ஜெயலலிதா தனது பணிகளைத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து, தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்குதல்  முக்கிய திட்ட கோப்புகளில் முதலில் கையெழுத்திட்டார்.

“மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற மக்கள் நல முழக்கத்துடன் மக்களை சந்தித்த ஜெயலலிதா, கடந்த 5-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் அறிவித்தப்படி சில முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் இன்று கையெழுத்திட்டார்.

– தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ், காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம்.

– 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கும் திட்டம்.  இதன் மூலம் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் பயன் அடைவார்கள். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

– கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி. இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

– கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும், விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட் வழங்கும் திட்டம்.

– தாலிக்கு 8 கிராம் தங்கம்: திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி அளிக்கப்படும் திட்டம்.

– மதுவிலக்கு படிப்படியாக அமல்: பூரண மதுவிலக்கு என்ற நிலையை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம், மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் ஜெயலலிதா இன்று கையொப்பமிட்டார்.

இன்று தனது மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதாவின் பயணங்கள், இனி மக்கள் நலன்நோக்கியே இருக்கும் என்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.

தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள மக்கள் நலத்திட்டங்கள்….

– பணியிடங்களுக்கு மகளிர் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்

– அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கும் திட்டம்

– பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள் வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன் அளிக்கப்படும் திட்டம்.

– நிகழாண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் திட்டம்.

– உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கும் திட்டம்.

– ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம் ஏற்படுத்தப்படும். குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஈடு ஏதுமின்றி கடன் பெறும் திட்டம்.

– அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் வகையில், ரூ.1,000 வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டம்.

– வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும் திட்டம்.

– தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு பெற்றவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் விலையின்றி வழங்கப்படும். பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், “வை-பை’ எனும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கும் திட்டம்.

– அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம் உருவாக்கப்படும். இதில் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சி பெறுவோருக்கு சுய தொழில் தொடங்க உதவிகள் வழங்கும் திட்டம்.

– வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகையானது 10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு ரூ.300-ம், பிளஸ் 2 முடித்தோருக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற அளவில் உயர்த்தி வழங்கும் திட்டம்.

– மண்பாண்ட-உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்படும் திட்டம்.

– மகளிர்-குழந்தைகள் நலன் பேணும் வகையில், செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.25 என்ற குறைந்த விலையில் வழங்கப்படும் திட்டம்.

– மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக அதிகரிக்கப்படும் திட்டம்.

– மடிக் கணினியுடன் கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி

– பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம்

– மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக உயரும்.

– விடுமுறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி

– ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை

– மீனம்பாக்கம்-செங்கல்பட்டு வரை உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம்.

– அரசுத் துறை சேவைகள் இணையம்-கைப்பேசி மூலம் அளிக்கப்படும் திட்டம்.

– புதிய கிரானைட் கொள்கை

– அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை.

– வீடு கட்ட முன் பணம் ரூ.40 லட்சமாக உயர்த்து திட்டம்.

– வழக்குரைஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயர்த்து திட்டம்.

– லோக்-ஆயுக்த உருவாக்கப்படும்

நடந்து முடிந்த 15-வது தேர்தலில் எதிர்கட்சிகளின் பிரசாரங்களை அமைதி என்ற ஆயுதத்துடன் “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற மக்கள் நல முழக்கத்துடன் மக்களை சந்தித்த ஜெயலலிதா, இன்று அரியணை ஏறிய முதல்வர் ஜெயலலிதாவின் மேற்கண்ட தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் படிப்படியாக தமிழக மக்களின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும் என்று நம்புவோம்.