பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 16,

அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கடந்த 8-ந் தேதி வெளியிட்டிருந்தார்.

இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைக் கால பட்ஜெட் உரையை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிப்பார். அதைத் தொடர்ந்து சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடையும்

பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்தப்படும். அதில் என்னென்ன அலுவல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும். பின்னர் அதுபற்றி சபாநாயகர் அறிவிப்பார்.

சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத் தொடர் என்பதால் தேர்தல் கூட்டணி தொடர் பான விவாதங்கள் முக்கியத்துவம் பெறும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புதிய அறிவிப்புகளையும் எதிர்பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. போராட்டங்களில் ஈடுபட்டிருக் கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் அவர்களின் கோரிக்கை தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த கூட்டத்தொடரின்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அரசின் செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடர் 19-ந் தேதி வரை நடைபெறக்கூடும்.