பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் : சந்திரபாபு நாயுடுவுக்கு அவசரக் கடிதம்

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் : சந்திரபாபு நாயுடுவுக்கு அவசரக் கடிதம்

சனி, ஜூலை 02,2016,

சென்னை:பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப் பட்டிருப்பதற்கு   – முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலாற்றின் தடுப்பணை உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள் என்று வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.,

பாலாற்றின் தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக ஆந்திர அதிகாரிகள் உயர்த்தி இருக்கிறார்கள் இதனை தங்கள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர விரும்புகிறேன். சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே இந்த தடுப்பணை உயரத்தை அதிகரித்துள்ளனர். இந்த பகுதி ஆந்திரா-தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள இடமாகும். பாலாறு மாநிலங்கள் இடையே ஓடும் ஆறு என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தநிலையில் ஆந்திர அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் நடவடிக்கை தமிழகத்திற்கு பெரும் எச்சரிக்கை நிலையை ஏற்படுத்தியிருப்பதுடன், கவலைகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

ஏற்கனவே பாலாற்றிலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு பற்றாக்குறையுடன் உள்ளது. அந்த ஆறு தமிழகத்தின் ஆயக்கட்டு பகுதியுள்ள 4.20 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியை அளிப்பதாகும். தமிழகத்தின் வட மாவட்டங்கள் தங்கள் பாசன வசதிக்கு இந்த ஆற்றை மட்டுமே நம்பி இருக்கின்றன. பாலாறு மற்றும் அதன் மணல் பகுதி தமிழகத்தின் வட மாவட்டங்களின் பல கிராமங்களுக்கு குடிநீர் வசதியை அளிக்கிறது. பாலாற்றின் தண்ணீர் கல்பாக்கத்தில் உள்ள அணு மின் நிலையத்திற்கும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பாலாறு மாநிலங்கள் சார்ந்த ஆறு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

மெட்ராஸ் – மைசூரு இடைய 1892-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, நீர்பிடி கீழ்பகுதி மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நீர்பிடி மேல்பகுதியில் எந்த அணைக்கட்டையோ அல்லது எந்த வித கட்டுமானத்தையோ கட்டக்கூடாது. அதேப்போன்று ஆற்றின் குறுக்கே தண்ணீரை திருப்புவதோ அல்லது தண்ணீரை சேமித்தோ வைக்கக்கூடாது. பாலாறு சார்ந்த 15 முக்கிய நதிகளில் இதனை மேற்கொள்ளக்கூடாது. பாலாறு மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே எந்த ஒரு கட்டுமானப்பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த 10-2-2006 அன்று ஒரு வழக்கினை தொடர்ந்துள்ளது.

பாலாறு மற்றும் அதன் துணை நதிகளின் தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்துவது அல்லது தண்ணீர் பாதையை மாற்றி விடுவது மெட்ராஸ் – மைசூரு இடையே 1892-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இந்த சூழ்நிலையில், ஆந்திர பிரதேசம் தன்னிச்சையாக பெரும்பள்ளம் கிராமத்தில், (சித்தூர் மாவட்டம்) பாலாற்றின் குறுக்கே தற்போது உள்ள தடுப்பணை உயரத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு எதிர்க்கிறது. 1892-ம் ஆண்டு மெட்ராஸ்-மைசூரு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயலாக இந்த தடுப்பணை உயரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தடுப்பணை உயரம் அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தடுப்பணையின் உயரத்தை குறைக்க உரிய நீர்பாசன அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகிறேன். அந்த தடுப்பணை பழைய உயர நிலைக்கே இருக்க செய்ய வேண்டும். அங்கு கூடுதல் தண்ணீரை தேக்கக்கூடாது. மேலும் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவை உறுதிபடுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தங்களது சாதகமான பதிலை எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.