பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியை நம்ப வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியை நம்ப வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை,

சென்னை : தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை. வீண் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று  சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ”தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி போன்ற கலப்படங்கள் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக குற்றச்சாட்டு வந்ததுமே தமிழகம் முழுவதிலும் இருந்து உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு 3 ஆயிரத்து 124 கடைகளில் அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டன.

அதில் எதிலும் பிளாஸ்டிக் அரிசி இருப்பது உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லவே இல்லை. ஆனாலும் இதுபற்றி சோதனை நடத்த அதிகாரிகள் களத்தில் தயாராக உள்ளனர். எனவே, பிளாஸ்டிக் அரிசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.  இவ்வாறு அவர் கூறினார்.