புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்

புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017,

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவலர் உட்பட மூன்று பேர் மண்டை உடைந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். பின்னர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அவரது நினைவிடத்தில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். பின்னர் ெசய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் உருவாகி உள்ளது. இதில் சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் முகாமிற்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில்  சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த சசிகலா உள்பட 3 பேருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக சசிகலா தரப்பு சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக கவர்னர் மாளிகையில்  தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.

எடப்பாடி பழனிச்சாமியின் பதவியேற்பு விழா முடிந்த சில மணிநேரத்தில் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது அருகில் வசிக்கும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்துதான் சரமாரியாக கல்வீசி தாக்கப்பட்டது.  இதை சற்றும் எதிர்பாராத போலீசார் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நாலப்புறமும்  சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி(43) மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சங்கர நாராயணன் உட்பட மூன்று பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால்  ஓ.பன்னீர்செல்வம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. கல்வீசி தாக்குதல் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.