புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

புதிய வரிகள் இல்லாத பட்ஜெட் : நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்

வெள்ளி, ஜூலை 22,2016,

2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் ஆகியவை நிதியமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.

தமிழக சட்டபேரவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா காலை 10.51 மணிக்கு சபைக்கு வந்தார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று வணக்கம் கூறி வரவேற்றனர். அவருடன் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்துடன் கூடிய பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸூடன் வந்தார். அவரை தொடர்ந்து காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் சட்டசபைக்கு வந்தார், அவரை முதல்வர் ஜெயலலிதாவும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் திருக்குறள் வாசித்து 2016-17-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென நிதியமைச்சரை கேட்டுக்கொண்டார்.

காலை 11.01 மணிக்கு 77 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரையை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாசிக்க தொடங்கினார். சரியாக பகல் 1-27 மணி வரை கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வாசித்தார். பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவையில் அமர்ந்தபடி முதல்வர் ஜெயலலிதா மிகுந்த கவனத்துடன் இரண்டரை மணி நேரம் ஆர்வத்துடன் ஆராய்ந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை பற்றி பட்ஜெட்டில் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் குறிப்பிடும்போதெல்லாம் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மேசையை தட்டி வரவேற்றனர்.

ஏழைகளுக்கு 10லட்சம் வீடுகள்:

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 10லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்என்றும், இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டிதரப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் உரையில் கூறியதாவது.,
தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, ஏழைகளுக்கான வீட்டுவசதி வழங்கும் மாநில இயக்கத்தின் கீழ், வீட்டுவசதித் திட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது. ஆற்றல் மிக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பல்வேறுதிட்டங்களின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கும்.

‘பிரதம மந்திரி வீட்டு வசதித்திட்டத்தின் (ஊரகம்) கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு ஒன்றுக்கு 70,000 ரூபாய் மதிப்பீட்டில் 45,788  வீடுகளை சிறப்பு ஒதுக்கீடாகவும், வீடு ஒன்றுக்கு 1.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்1,31,831 வீடுகளை வழக்கமான ஒதுக்கீடாகவும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 40 சதவீதம் நிதிப்பகிர்வு மாநில அரசின் பங்காகும். எனினும், வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு ஒரே சீராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கூரை அமைப்பதற்கு 50,000 ரூபாயை கூடுதலாக வழங்கி, அனைத்து வீடுகளுக்குமான மதிப்பீட்டுத் தொகையை வீடு ஒன்றுக்கு 1.70 லட்சம் ரூபாயாக முதல்வர் பெருந்தன்மையுடன் உயர்த்தியுள்ளார். 

எனவே, இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறப் பகுதிகளில் 3,095.62 கோடி ரூபாய் செலவில் 1,77,619 வீடுகளை 2016–2017-ம் ஆண்டிலேயே இந்த அரசு கட்டும். இதில், 1,908.47 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காக இருக்கும். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ‘முதல்வரின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின்’ கீழ், 2016–-2017–ம் ஆண்டில்420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகள் கட்டப்படும்.

குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் மறுவாழ்விற்காகவும், நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்கவும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், கடந்த ஐந்து ஆண்டுகளில், 2,753.42 கோடி ரூபாய் செலவில், 59,023 குடியிருப்புகளைக் கட்டியுள்ளது. மேலும், 10,537 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகளைத் தொடர, 2016–-2017–ம் ஆண்டில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம், 23,476 வீடுகளைக் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்த்துவதற்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதிவழங்க, ஒரு சிறப்பு நிதியமாக ‘வீட்டுவசதி நிதியத்தை’ இந்த அரசு ஏற்படுத்தும். ‘அனைவருக்கும் வீட்டுவசதி’ திட்டத்திற்காக, 2016–-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 689 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம் தூய்மையான கிராமங்கள் மற்றும் நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன், ‘தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கத்தை’ இந்த அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் கழிவறைகளை உபயோகிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதுடன், சிறப்பான முறையில் திடக்கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்கவும், ‘தூய்மை இந்தியா இயக்கத்தின்’ கீழ் பெறப்படும் நிதி ஆதாரங்களுடன் மாநிலத் திட்டநிதிகளும் ஒருங்கிணைக்கப்படும். ‘தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்)’ கீழ் 2016–-2017–ம் ஆண்டில் 7.66 லட்சம் வீட்டுக் கழிவறைகளும், 50 பொது சுகாதார வளாகங்களும் கட்டப்படும். கழிவறைகளை அமைத்து, அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதை மக்களிடம் ஊக்கப்படுத்தும் பணியில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள சுய உதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 9,000 கிராம ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு வலுசேர்க்க 52,998 தூய்மைக் காவலர்கள் அமர்த்தப்பட்டு, 22,704 மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குப்பைகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2016–2017-ம் ஆண்டில், மீதமுள்ள 3,524 கிராம ஊராட்சிகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து ஊரகப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

மாநில அரசால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலிருந்து, திடக்கழிவு மேலாண்மைக்காக150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, 402 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 833.22 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாகச் செயல்படுத்தவும், தூய்மை இந்தியா இயக்கத்தின்
(நகர்ப்புறம்)’ கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரங்களின் தூய்மையைப் பராமரிப்பதற்காக, 2016–-2017–ம் ஆண்டுக்கு, திடக்கழிவு மேலாண்மை நிதிக்கு, மாநில நிதிப் பகிர்வு மானியத்திலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ396.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரிவோர், வீட்டிலிருந்து எளிதில் கல்வி நிலையங்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் சென்று வர அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பேட்டரியால் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு மாற்றாக பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்கள் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

2011-2012-ம் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2012-2013-ம் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் செலவில் 370 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2013-2014-ம் நிதியாண்டில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 985 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2014-2015-ம் நிதியாண்டில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 969 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 2016 -17-ம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும் இந்த உரையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக 703.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த பின்னர், வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.